Dr K Kumar
மதுரை தமிழ் நாட்டின் ஒரு தொன்மையான நகரம். பல சிறப்புகள் கொண்டது மதுரை மா நகர். சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்டிய ஒரு புனித தலம். திரு ஆலவாய் என்கிற மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் வளர்த்த தன்னிகரில்லா நகரம்.
மனிதரை மயக்கும் மல்லிகை பூ;
இந்த நகருக்கே உரித்தான ஜிகர் தண்டா குளிர்
பானம்;
மதுரை புறநகர் பகுதியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு;
அன்று தனித்துவம் வாய்ந்த
முனியாண்டிவிலாஸ் பிரியாணி;
இவை எல்லாம் விட முக்கியமானது இது
கோவில்கள் நகரம் என அழைக்கப்படுவதே.
அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் அமைந்துள்ளது
மதுரை மீனாட்சியம்மன் கோவில்.
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில்
ஆண்டு முழுவதும் எப்போதும் திருவிழா என்று அழைக்க படுகிறது.
இருந்தாலும் உலகிலேயே மிக அதிக நாட்கள்
நடைபெறும் ஒரு ஆன்மீக திருவிழா என்ற பெருமையும் பெற்றது நம்
சித்திரைத் திருவிழா.
2023ல் இந்த சித்திரைத் திருவிழாவினை 16
நாட்கள் கொண்டாட இருக்கிறோம்.
கோவில் நிர்வாக அறிவிப்பின்படி ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8ம் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
23 முதல், ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, அழகிய நான்கு மாட வீதிகளில் உலா வரும் காட்சியை காண பல்லாயிரகணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள். நகரமே ஜே ஜே என்று நள்ளிரவில் கூட களை கட்டி இருக்கும்.
கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்க பல்லக்கு, வேடர் பறி லீலை, தங்க குதிரை வாகனம், -சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை, ரிஷப வாகனம், நந்திகேஸ்வரர், யாளி வாகனம் என்று பல வேறு
வாகனங்களில் ஏப்ரல் 23 முதல் 29 வரை அருள் பாலித்து உலா வந்தபின், இந்த விழாவின் முதல் முக்கிய
நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்மாசன உலா ஏப்ரல் 30ம் தேதி நடைபெற
உள்ளது.
அடுத்த முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு மே 2ல் நடைபெற உள்ளது.
மதுரை அரசாளும் அன்னை மீனாட்சிக்கு
கல்யாணம் என்றால் ஏதோ தங்கள் சொந்த வீட்டு
விசேஷம்தான் என்று எண்ணி மக்கள் திரளாக கூடுகின்றனர். பெண்கள் தங்களின்
பழைய தாலி கயிறுக்கு பதிலாக புதுத்தாலி அணிந்து மஞ்சள், குங்குமம் சூடி கணவர் நீண்டநாள் வாழ அம்மனை வணங்குகின்றனர்.
அதன் பின், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொரு நாளாக தேரோட்டம், சப்தாவர்ண சப்பரம், தீர்த்தவாரி, வெள்ளி விருச்சபை சேவை, கள்ளழகர் எதிர்சேவை முடித்து, இந்த விழாவின் முத்தாய்ப்பு என்கிற 1000 பொன்சப்பரம் அமைத்து அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் எழுந்தருளல் மே 5ல் நடைபெரும்.
தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வரும்
கள்ளழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில்
நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் ஒரு நம்பிக்கை.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். சித்திரை விழாவின் இறுதி
கட்டமாக மதுரையில் கள்ளழகர் சித்ரா
பவுர்ணமியில் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பதைக் காண லட்சக்கணக்கான
பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள்.
பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர்
பீச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல்
நடைபெறும்.
பின்னர் மறு நாள் கள்ளழகர் மண்டூக
மகரிஷிக்கு மோட்சம் அளித்து, அடுத்த
மூன்று நாட்கள் கள்ளழகர் தசாவதார காட்சி,
மோகினி அவதார திருக்கோலம், புஷ்ப பல்லக்கில் பவனி வந்து, பின்னர் மே 8ல் - கள்ளழகர் திருமலை எழுந்தருளலுடன் சித்திரை
திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.
பல தமிழ் தொலைக் காட்சி நிறுவனங்கள், அலை
வரிசைகள், இந்த விழாவினை நேரடி ஒளி பரப்பு செய்ய இருக்கின்றன. கண்டு களியுங்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த சைவ வைணவ மத ஒற்றுமையை பறை சாற்றும்
மதுரை சித்திரை திருவிழாவின்போது உங்கள் அனைவருக்கும், மீனாட்சி – சுந்தரேஸ்வரர்
மற்றும் கள்ளழகர் அருள் கிடைத்திட சைக்கிள் பியூர் நிறுவனத்தின் நல் வாழ்த்துக்கள்.