-
Dr. K Kumar (திரு கி.
குமார்)
புத்தாண்டின் வருகையையும், வசந்த காலத்தின் தொடக்கத்தையும் அறிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகை கன்னடத்தில்
யுகாதி (ಯುಗಾದಿ)
என்றும் தெலுங்கில் உகாதி (ఉగాది)
என்று அழைக்கப்படுகிறது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை இது.
மகராஷ்டிரா மற்றும் கோவா வில் இது குடி
படவா (गुढीपाडवा) என்று கொண்டாடப்படுகிறது.
ராம நவமிக்கு வழிவகுக்கும் சைத்ரா
நவராத்திரியின் தொடக்கத்தையும் இந்த உகாதி குறிக்கிறது.
2023ம் ஆண்டு மார்ச் 22 இந்த பண்டிகை
சிறப்பாக கொண்டாடப்படும்
யுகாதி பிறந்த வரலாறு:
சத்ய யுகத்தில் (பூமி உருவான ஆரம்ப
காலத்தில்), சோமகாசுரன் என்ற
சக்திவாய்ந்த அரக்கன் இருந்தான். அவன் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடி, கடலுக்குள் மறைந்தான்
பிரம்மா, வேதங்களைத் திரும்பப் பெற பகவான் விஷ்ணுவின் உதவியை
நாடினார். பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு தெய்வீக மீனின் (மத்ஸ்யாவதாரம்) அவதாரத்தை எடுத்து
சோமகாசுரனைக் கொன்று, வேதங்களைக் கொண்டு வந்து
பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
பின்னர் பிரம்மா மீண்டும்
பிரபஞ்சத்தை உருவாக்கத் தொடங்கினார். பின்னர் நேரத்தை கண்காணிப்பதற்காக நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் வருடங்களை அறிமுகப்படுத்த சென்றார்.
எனவே, உகாதி பிரபஞ்சத்தின் ஆரம்பம்
அல்லது முதல் நாள் என்று நம்பப்படுகிறது.
"யுகாதி" என்ற சொல்
சமஸ்கிருத வார்த்தைகளான "யுக்" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, அதாவது சகாப்தம் மற்றும்
"ஆதி", அதாவது
ஆரம்பம். எனவே, உகாதி
ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. உண்மையில், இந்து மதத்தில், 60 வருட சுழற்சி உள்ளது.
உகாதி என்றால் புத்தாண்டின் ஆரம்பம் அல்லது "சம்வத்ஸரம்".அறுபது
சம்வத்ஸரங்களும் தனித்துவமான பெயரால் அடையாளம் காணப்படுகின்றன.
மக்கள் இந்த நாளில் புது பஞ்சாங்கத்தை
படிப்பார்கள். வீட்டில், குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அல்லது கோயில்களில் தலைமை அர்ச்சகர்
மூலம் இதைப் படிக்கிறார்கள், கேட்கிறார்கள்.
சந்திரன் மேஷ ராசியில் (மார்ச்
அல்லது ஏப்ரல் மாதம்) அடியெடுத்து வைக்கும் தினத்தைத் தங்களின் வருடப் பிறப்பாகக்
கொள்கிறார்கள் கன்னட, தெலுங்கு . மக்கள். மகாராஷ்ட்ர, குஜராத்தி மக்களும் இந்த நாளையே தங்களின் வருடப்
பிறப்பாகக் கொள்கிறார்கள்.
விஷ்ணு பகவான் யுகாதிக்ரித் என்று
அழைக்கப்படுகிறார், அவர் யுகங்களை
உருவாக்கியவர். எனவே இந்த நாள் காலத்தின் மூலகத்தை உருவாக்கிய பர பிரம்மத்தை
வணங்குவதற்கு மிகவும் உகந்த நாள்.
யுகாதி அன்று அனைத்து
கோயில்களிலும், குறிப்பாக திருப்பதியில் அலங்காரங்களில் ஜொலிக்கும் ஆண்டவனை, ஏராளமான மக்கள் தரிசனம் செய்யக் குவிவார்கள்.
மாவிலை (மா இலை), வண்ணக் கோலங்கள் மற்றும் யுகாதி பண்டிகை:
யுகாதி அன்று மக்கள் வீட்டின் கதவுகளை
"தோரண" (கன்னடம்)அல்லது "தோரணாலு" (தெலுங்கு)என்று
அழைக்கப்படும் மா இலைகளால் அலங்கரிக்கின்றனர்.
தரையில் வண்ணமயமான வடிவங்களை
வரைந்து யுகாதி ஆரம்பம் அனுசரிக்கப்படுகிறது. தெலுங்கில் இது "முக்குலு"
என்றும், கன்னடத்தில்
"ரங்கோலி" என்றும் அழைக்கப்படுகிறது.
மாவிலையின் பின்னணியில் லட்சுமி
தேவி வசிக்கிறாள் என்றொரு ஐதீகம்.
பண்டிகை நாட்களில் தொடக்கத்தில் கலசம்
என்னும் செம்பில் புனித நீர் எடுத்து பூஜைக்கு உபயோகிக்கும்முன், அந்த கலசத்தின்
விளிம்புகளில் மா இலைகளை வைத்து, அதன் பின் வேண்டுமானால் ஒரு தேங்காய் வைப்பதும்
வழக்கம்.
மாவிலைக்கு இன்னொரு சக்தியும்
உண்டு. மரம், செடி, கொடிகள் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயுவை
எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன. மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு
கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறான். மாசுபடும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துபவை
மரம், செடி, கொடிகள்.
மரத்திலிருந்து வெட்டப்பட்ட
பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு
என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.
வேம்பு அடிப்படையிலான ஒரு
கலவை உண்பது:
கர்நாடகத்தில் யுகாதி அன்று ‘பேவு
பெல்லா’ தயாரித்து உண்பது மற்றொரு சிறப்பம்சமாகும். பேவு என்பது கசப்பைக்
குறிக்கிறது. பெல்லா என்றால் இனிப்பு. இந்த கலவை, கோடையில் மட்டுமே பூக்ககூடிய
வேப்பம் பூக்களையும், மிளகாய் தூள், புளி, உப்பு, பழுக்காத மாம்பழம் மற்றும்
வெல்லம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் கசப்பாகவும், காரமாகவும், புளிப்பாகவும், இனிப்பாகவும் ஒரே நேரத்தில் இருக்கும். கஷ்டங்கள், கோபங்கள், சவால்கள், ஆச்சரியங்கள் மற்றும் மகிழ்ச்சியை உள்ளடக்கிய வாழ்க்கையின்
பல சுவைகளை இது பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படுகிறது
தெலுங்கு மக்கள் உகாதி அன்று எடுத்துக் கொள்ளும் முதல் உணவு உகாதி
பச்சடி. உகாதிபச்சடியின் முக்கியத்துவம் மகத்தானது, ஏனெனில் இது வாழ்க்கையின் சாரத்தை குறிக்கிறது என்பதே
ஆகும். வெல்லம் (இனிப்பு): மகிழ்ச்சியைக் குறிக்கிறது; உப்பு: வாழ்க்கையில் ஆர்வம்
காட்டுதல்; புளி (புளிப்பு) சவால்களை அடையாளப்படுத்துகிறது; வேப்பப் பூக்கள்
(கசப்பு) : வாழ்க்கையின் சிரமங்களைக் காட்டுகிறது; பச்சை மாம்பழம்: ஆச்சரியங்கள்
மற்றும் புதிய சவால்களைக் குறிக்கிறது; மிளகாய் தூள் (காரம்): ஒருவரின்
வாழ்க்கையில் கோபமான தருணங்களைக் காட்டுகிறது. என்று ஆதி காலத்திலிருந்து
சொல்லப்படுகிறது.
குடி படவா அன்று மகாராஷ்டிரா
மற்றும் கோவா வில் எண்ணை குளியல் எடுத்துக்கொண்டு வேம்பு இலைகளை சிறிது இனிப்புடன்
உண்டு கடவுளை வணங்குவது வழக்கம்
வட இந்தியாவில் சைத்ரா
நவராத்திரியின் முதல் நாள் வேம்புடன் சர்க்கரை மிட்டாய் சேர்த்து சாப்பிடுவது வழக்கம்
வேம்பு அடிப்படையிலான ஒரு கலவை பண்டத்தை
உண்பது, ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஒரு
நம்பிக்கை உள்ளது
வீட்டின் நுழைவாயிலில் வேப்ப
இலைகள் கட்டப்பட்டதன் பின்னணியில் மத ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்
முக்கியத்துவம் பெற்றுள்ளது. மா இலைகளின் பண்புகளைப் போலவே வேப்ப இலைகளும் தீய
சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் என்று நம்பப்படுகிறது
யுகாதியை வரவேற்று, இனி வரும் புத்தாண்டு வளமான வாழ்வை நமக்கு வழங்கும் என்கிற
நம்பிக்கையோடு காத்திருப்போம். நல்லதே நினைப்போம். நல்வழி நடப்போம்.
இந்த நன்னாளில், உங்கள் அனைவருக்கும், தமிழ் நாட்டு, தமிழ் பேசும் உலக மக்களுக்கும், நம் தெலுங்கு மராட்டி குஜராத்தி மற்றும் வட இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சைக்கிள் பியூர் நிறுவனத்தின் நல் வாழ்த்துக்கள்
HOLIGE RECIPE
பருப்பு போளி செய்வது எப்படிI Ugadi Special
